பாஜக ஆட்சியை இழக்கும்: திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை!

By Manikanda Prabu  |  First Published Mar 8, 2024, 10:08 PM IST

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என திருவனந்தபுரம் எம்.பி.யும், அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்


மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கர் 6, கர்நாடக 7, கேரளா 16, மேகாலயா 2, தெலங்கானா 4, லட்சதீவு, சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 வேட்பாளர் என மொத்தம் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 15 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். 24 பேர் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, சிறுபான்மையினர் ஆவர். 

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும், கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் கர்நாடகா மாநிலம் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதி மிகவும் கவனம் ஈர்த்துள்ளது. பாஜக வேட்பாளராக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பன்யன் ரவீந்திரனை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. இதனால், திருவனந்தபுரம் தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திருவனந்தபுரம் எம்.பி.யாக இருப்பவர் சசி தரூர். 2005ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் பன்யன் ரவீந்திரன். அதற்கு முன்பு காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த பின்னணியில், பாஜக சார்பில் தற்போது ராஜீவ் சந்திரசேகர் களமிறக்கப்பட்டுள்ளதால், சசி தரூருக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

அந்த தொகுதியில் பாஜக ஆதரவான நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் இருந்தாலும் கேரளாவில் அந்த இரண்டு கட்சிகளும் இரு துருவங்கள். எனவே, இரு கட்சிகளும் வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாக போகவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்த தொகுதியின் சசி தரூருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கும் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என திருவனந்தபுரம் எம்.பி.யும், அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 370 இடங்களில் வெற்றி பெற அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 303 தொகுதிகளை பாஜக மீண்டும் பெறுவது கடினம் எனவும், இந்த நேரத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்று தான் நம்புவதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர்,  “திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தது பெருமையான விஷயம். நியாயமான மற்றும் பயனுள்ள போட்டியை எதிர்பார்க்கிறேன். 15 ஆண்டுகால அரசியலில், நான் ஒரு நாளும் எதிர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. மற்ற கட்சி வேட்பாளர்களிடம் இருந்து நியாயமான விவாதங்கள், போட்டியை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

மக்களவைத் தேர்தல் 2024: திருவனந்தபுரத்தில் சசி தரூருக்கு எதிராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியது ஏன்?

“பாஜக மீண்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இந்த நேரத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த தரவுகளும் இல்லை.” என சசி தரூர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு தேர்தலிலும் எப்பொழுதும் எவரேனும் ஒரு கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்வது உண்டு. அது மோதல் அல்லது குழப்பம் என்று அர்த்தமல்ல. தனிமனிதர்களுக்கு அரசியலில் அவரவர்கென்று லட்சியம் இருக்கிறது. அவர்கள் அதை வேறு இடத்தில் தொடர விரும்புகிறார்கள். சிலர் பாஜகவை விட்டு வேறு திசையிலும் சென்றுள்ளார்கள். இவையெல்லாம் நடக்கின்றன. நிச்சயமாக கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புகளை பார்த்து வருகிறோம் அதைத்தான் நான் திருவனந்தபுரத்தில் செய்து வருகிறேன். எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன்.” என்று தெரிவித்தார்.

கடந்த 2009 தேர்தலில், சசி தரூர் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளர் ராஜகோபால், சசி தரூருக்கு கடுமையான சவாலாக இருந்தார். இதனால், அந்த தேர்தலில் சசி தரூர் 15,470 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ஆனாலும், 2019 தேர்தலில் மீண்டும் எழுச்சி பெற்ற சசி தரூர், நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் சுமார் 3.16 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

click me!