
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இருவேறு சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் இறந்தனர், சிம்லா நகரின் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாநில முதல்வர் உறுதி செய்துள்ளார்.
சோலனில் உயிரிழந்தவர்கள் ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹேம்லதா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8), மற்றும் ரக்ஷா (12) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் தெரிவித்துள்ளார். சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்புக்குப் பிறகு 6 பேர் மீட்கப்பட்டதாகவும், இரண்டு வீடுகளும், ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சிம்லா நகரில் ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் 15 முதல் 20 பேர் புதையுண்டிருக்கலாம் என அந்நகரின் துணை ஆணையர் ஆதித்ய நேகி தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளா அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“சோலன் மாவட்டத்தில் உள்ள தவ்லா துணை தாலுகாவில் உள்ள ஜாடோன் கிராமத்தில் நடந்த மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் உங்கள் வலியிலும் துயரத்திலும் நாங்கள் பங்கு கொள்கிறோம்.” என முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சிம்லா சிவன் கோயிலின் இடிபாடுகளில் இருந்து ஒன்பது உடல்கள் மீட்கப்பட்ட துயர செய்தியை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பகிர்ந்திருந்தார். “சிம்லாவில் இருந்து துன்பகரமான செய்திகள் வெளிவந்துள்ளன, அங்கு பெய்த கனமழையின் விளைவாக சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்தது. தற்போது, ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் பணியில் உள்ளூர் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.” என அவர் தெரிவித்திருந்தார்.
பேரிடர் காரணமாக மாநிலத்தில் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக இமாச்சலப்பிரதேச மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சேதம் மற்றும் பேரழிவு குறித்து மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கனமழையைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இமாச்சலப்பிரதேசத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தீவிரமாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு, மத்தியதரைக் கடல் பகுதியில் உருவாகும் வெப்பமண்டலப் புயலால் இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளில் ஏற்படும் திடீர் குளிர்கால மழை காரணமாக இருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2023 சுதந்திர தினம்: ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 சட்டங்கள்..
மேலும், பருவமழையின் மையப்பகுதி இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. எனவே தென்மேற்கு அரபிக் கடல் பருவக்காற்று இமயமலை அடிவாரத்தை தாக்குகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் உள்ளது. பருவமழையின் பேரழிவு தாக்கத்தால் ரூ.7020.28 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 24 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில், 66 பேர் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். 191 பேர் சாலை விபத்துகள் அல்லது பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும், 32 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 290 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.