ஹிஜாப் விவகாரம்.. இதெல்லாம் நல்லதல்ல.. கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை.. பதற்றத்தால் விடுமுறை அறிவித்த அரசு.!

Published : Feb 08, 2022, 09:15 PM IST
ஹிஜாப் விவகாரம்.. இதெல்லாம் நல்லதல்ல.. கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை.. பதற்றத்தால் விடுமுறை அறிவித்த அரசு.!

சுருக்கம்

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், சிலுவைகள் போன்றவை நேர்மறை மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பே. இந்தியாவில் நேர்மறையான மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹிஜாப் அணிந்துவந்தால், காவித் துண்டு அணிந்து வருவோம் என்று கூறி பல பகுதிகளிம் இந்துத்துவ மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹிஜாப் அணிய பல கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்தன். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இதற்கிடைய கல்லூரி நிர்வாகங்களின் உடை கட்டுப்பாட்டை எதிர்த்து ஏராளமான வழக்குகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் இந்த வழக்கை விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் ஆஜரானார். அவர் வாதிடுகையில், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதி. அதேபோல் ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது தனிமனித உரிமையின் ஒரு பகுதி. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், சிலுவைகள் போன்றவை நேர்மறை மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பே. இந்தியாவில் நேர்மறையான மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறது. அரசு அனைத்து மதங்களையும் மதிக்கிறது. பிராமணர்கள் இந்து மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அது பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று சொல்ல சொல்ல முடியுமா

சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகை பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று அரசால் சொல்ல முடியுமா? அதேபோல இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதிதான் ஹிஜாப் அணிவது” என்று காமத் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட  நீதிபதி தீட்சித், "எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டும் நடப்போம். அரசியலமைப்பு சட்டம்தான் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய பிரமாணம் செய்திருக்கிறேன். அடன்படியே நடப்பேன்.” என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர் சமூகம் அமைதி காக்க வேண்டும். பொது மக்களின் நல்லொழுக்கத்தில் முழு நம்பிக்கை உள்ளது. 

போராட்டம் நடத்துவது, வீதியில் கூட்டமாக செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, பிற மாணவர்களைத் தாக்குவது போன்றவை எல்லாம் நல்லதல்ல. தொலைக்கட்சியில் நெருப்பையும் ரத்தத்தையும் பார்த்தாலே நீதிபதிகள் மனம் கலங்கிவிடுவார்கள். மனம் கலங்கினால் புத்தி வேலை செய்யாது. இந்த வழக்கை நாளையும் விசாரிப்பேன். எல்லோரும் அமைதியாக இருங்கள்” என்று நீதிபதி தீட்சித் தெரிவித்தார். இதற்கிடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!