மும்பையில் வரலாறு காணாத மழை ! இரவும் பகலும் கொட்டித் தீர்க்கிறது …. நகரெங்கும் வெள்ளக்காடு !!

By Selvanayagam PFirst Published Jul 3, 2019, 7:47 AM IST
Highlights

மும்பையில் 45  ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் நகர் முழுவதும் வெள்ளாகாடாக காட்சியளிக்கிறது. ஒரே நாள் இரவு பெய்த பெரு மழையால் மும்பை மற்றும் புனேவில் 34 பேர் பலியாகினர்.

மகாராஷ்ட்ராவில்  தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையை பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கி யது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்று பெரு மழை பெய்தது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன,

கொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29-ந்தேதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.

இந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.
ஒரே இரவில் மழைக்கு 34 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள். 

click me!