
கோடையில் கொளுத்தும் வெயிலால் நாட்டில் 80 சதவீத மாநிலங்கள் வெப்பத் தீவுகளாக மாறிவருகின்றன. இதனால் அலுவலக நேரம் மட்டுமின்றி, பள்ளிக்கூடங்களின் வேலைநேரமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பத்தை இந்தியா சந்தித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெறித்தது. மார்ச் மாத இறுதியில் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் 24 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் மின்தேவையும் முன்எப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது
இந்தியாவில் கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க 28 மாநிலங்களில் 23 மாநிலங்களையும், 100 நகரங்கள் மாவட்டங்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகைப்படுத்தியுள்ளது. இதன்படி அதிகபட்ச வெப்பம் உள்ளதில் ஏற்கெனவே 19 மாநிலங்கள் உள்ளன, இன்னும் பிறமாநிலங்கள், நகரங்களைச் சேர்க்கும் பணியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் அதிக வெப்பம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 9 மாநிலங்கள் மட்டும்தான் இருந்தன. தற்போது 23 மாநிலங்களையும் வகைப்படுத்த வேண்டியுள்ளது. நகரங்கள் அனைத்தும் வெப்பத் தீவுகளாக மாறுகின்றன. இதனால் ஒவ்வொரு நகரமும் வெப்பத்தைச் சமாளிக்க தனித்தனித்திட்டம் தயாரிக்க வேண்டும்” என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்
இந்த திட்டத்தின்படி மக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் தடுத்தல், பொது இடங்களில் குடிநீர் வசதியை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
மும்பையில் காய்கறி மார்க்கெட் மற்றும் இறைச்சி சந்தைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்கவும், மக்கள் சாலையில் நடக்கும்போது நீர் தெளித்தல், ஐஸ் பேக்குகள் வைத்தல் போன்ற திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலத் திட்டமாக சாலைகளில் மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, போக்குவரத்து போலீஸாருக்கு நிழற்குடை அமைத்தல், மார்க்கெட்பகுதியில் பச்சை நிற மேற்கூரை அமைத்தல் போன்றவை எடுக்கப்பட உள்ளன.
மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று தீத் தடுப்பு முறைகள் செயல்படுகிறதா, முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.