
கேரளமாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழை அப்பகுதி மக்களை பெரிய வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய 12 மணிநேரம் வரை ஆலங்கட்டிகள் உருகாமல், சாலையில் ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது பார்பதற்கு வித்தியாசமாக இருந்து.
கேரளமாநிலத்தில் கோடைகாலத்தில், அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு பெய்தாலும், சிறிதுநேரத்தில் அது உருகிவிடும். ஆனால், திங்கள்கிழமை பெய்த மழை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐஸ்கட்டியாக பொழிந்துவிட்டது எனலாம்.
வயநாடு மாவட்டத்தின் சுல்தான்பத்தேரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலையில் பெய்த மழை, ஆலங்கட்டிகளாக கொட்டித் தீர்த்தது. இதனால், குடை பிடித்துச் சென்றவர்கள், சாலையில் வெறும் தலையில் நடந்து சென்றவர்கள், பைக், டூவீலர், கார்களில் சென்றவர்கள் ஏதோ கற்கள் வந்து தாக்குவதைப்போல் இருந்ததால், வலியை தாங்கமுடியாமல் ஓரமாக ஒதுங்கினர்.
ஏற்குறைய 2 மணிநேரம் பெய்த மழைக்குப்பின், வீடுகளின் மேற்கூறைகள், சாலைகள், தெருக்கள் முழுவதும் கண்ணாடி கற்கள் போன்று சிறு சிறு உருண்டைகளாக ஆலங்கட்டிகள் பரவலாகக் கிடந்ததைப் பார்த்து மக்கள் ரசித்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஆலங்கட்டிகள் ஏறக்குறைய 12 மணிநேரம், அதாவது, மறுநாள் காலைவரை உருகாமல் இருந்ததால், சாலையில் ஒரு புறம் மக்கள் கூட்டி குவித்து வைத்தனர்.
இந்த ஆலங்கட்டி மழையால், வயநாடு பகுதியில் உள்ள விவசாயமும், விளைநிலங்களும் கடுமயைாகப் பாதிக்கப்பட்டுள்ளன.