பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட பிரபலம்!

Published : Jun 20, 2023, 04:52 PM IST
பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட பிரபலம்!

சுருக்கம்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு, கிராமி விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திப்பதுடன், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், சிந்தனை தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், மூன்று முறை கிராமி விருதை வென்றவரும், ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதருமான ரிக்கி கேஜுக்கு வெள்ளை மாளிகை அழைப்பு  விடுத்துள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, வெள்ளை மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ரிக்கி கேஜுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்

ஜூன் 22 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு சார்பில் இரவு விருந்து அளிக்கவுள்ளார். மதிப்புமிக்க அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரிக்கி கேஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ரிக்கி கேஜ், இந்த அழைப்பு குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் இருப்பதால், இந்த அழைப்பு எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. ஐ.நா., பொதுச் சபையின் தலைவரால் எனக்கு ஐநா நல்லெண்ணத் தூதுவர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இது எனக்கு மிகவும் உற்சாகமான தருணம்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால், இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் பல வழிகளில் பயனடையலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய அரசு நிகழ்ச்சிகளை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரிக்கி கேஜ் தெரிவித்துள்ளார்.

 

 

“பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  தூதராக இருக்கிறேன். இது நிலச் சீரழிவு மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். அதைவிட முக்கியமாக, ‘அவளுடைய நிலம், அவளுடைய வாழ்க்கை’ என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். பருவநிலை மாற்றம் மற்றும் நிலச் சீரழிவு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது.” என்று ஐநாவுடனான தனது தொடர்பு குறித்து ரிக்கி கேஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு வயலின் இசையுடன் தடபுடலாக விருந்து! வெள்ளை மாளிகையில் களைகட்டும் ஏற்பாடுகள்!

பிரதமர் மோடியுடனான தனது உரையாடலைப் பற்றி ரிக்கி கேஜ் கூறுகையில்,“கிராமி வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியிடமிருந்து வந்த வாழ்த்துச் செய்திகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கிராமி விருதை வென்ற பிறகு 2022 இல் அவருடனான உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது. பிரதமர் மோடியுடன் நான் நடத்திய முதல் சந்திப்பிலேயே, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தை அவர் கண்டார்.” என தெரிவித்தார். ஐநா பொதுச் சபையில் நான் மூன்றாவது முறையாக நிகழ்ச்சி நடத்துகிறேன் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி