
மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பல்வேறு தகவல்களை கூறினார்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு, அனைத்து வங்கிகளையும் நாடலாம் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, பொதுமக்கள் வங்கிகள் அதிகாலை முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடக்கின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ், அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவோர் கையில் மை வைக்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டும் பெற முடியும், ஏடிஎம்களில் ஒருமுறை ரூ.2,500 மட்டும் எடுக்க முடியும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தார்.
இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் இன்று டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.21,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்க ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி மூலம் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வோருக்கு, சேவை கட்டணம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்களில் பயணம் செய்வோர், ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்தால், சேவை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
செல்போன் கட்டணத்தை குறைப்பதாக டிராய் (TRAI) ஆறிவித்துள்ளது. சாதாரண போன்களுக்கு பண பரிவர்த்தனை சேவை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என்றார்.
மேலும், கடந்த வாரம் மத்திய அரசு ஊழியர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சம்பளமாக முன் பணம் ரூ.10000 வரை பெறலாம் என தெரிவித்தார். ஆனால், ஊழியர்கள் சம்பள பணம் ரொக்கமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் முழுமையாக வழங்கப்படாது என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் கூறினார்.