ஆந்திராவில் ஷாக்! ONGC கிணற்றில் எரிவாயு கசிவால் பயங்கர தீ.. ஊரை காலி பண்ணிட்டு ஓடும் மக்கள்!

Published : Jan 05, 2026, 05:52 PM IST
Andhra Pradesh Konaseema ONGC gas leak

சுருக்கம்

ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு பெரும் தீ விபத்தாக மாறியது. இந்த விபத்தால் அருகில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின, பாதுகாப்பு கருதி சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கோணசீமா மாவட்டம், ரசோல் அருகே உள்ள இருசுமண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி (ONGC) எண்ணெய் கிணற்றில் திடீரென ஏற்பட்ட பெரும் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இருசுமண்டா கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கிணற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் கலந்த இயற்கை எரிவாயு மிக பலத்த சத்தத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறியது.

 

 

தீப்பிழம்புகளால் சூழ்ந்த பகுதி

வெளியேறிய எரிவாயு அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பற்றிக் கொண்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, பனிமூட்டம் போலக் காட்சியளித்தது. இந்தத் தீ விபத்தில் அருகில் இருந்த சுமார் 500 தென்னை மரங்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் ONGC அதிகாரிகள் உடனடியாகக் கீழ்க்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒலிபெருக்கிகள் மூலம் இருசுமண்டா மற்றும் அருகிலுள்ள மூன்று கிராம மக்களுக்கு மின்சாரம் பயன்படுத்தவோ, அடுப்பு எரிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு கருதி 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிராம மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

களத்தில் ONGC மீட்புக் குழு

விபத்து நடந்த இடத்திற்கு ராஜமகேந்திரவரத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி.யின் நெருக்கடி கால மேலாண்மைக் குழு விரைந்துள்ளது. தீயை அணைக்கவும், எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தவும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இந்த விபத்து குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மேக் இன் இந்தியா ஜாக்பாட்! கடலில் கெத்து காட்டும் புது கப்பல் 'சமுத்ர பிரதாப்'!
மோடி ஒரு நல்ல மனுஷன்.. என்னை சந்தோஷப்படுத்திட்டாரு.. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் குஷி!