
மத்திய அரசுப் பணியாளர் அமைச்சக உத்தரவின்படி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் செவ்வாய்க்கிழமை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 29 அன்று பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அந்தப் பதவிக்கு அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அஜய் குமாரின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள கேடர் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரியான அஜய் குமார், ஆகஸ்ட் 23, 2019 முதல் அக்டோபர் 31, 2022 வரை பாதுகாப்புத்துறை செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பு ஒரு தலைவரின் தலைமையில் அதிகபட்சமாக 10 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
தற்போதை நிலையில், ஆணையத்தில் இன்னும் இரண்டு உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. யுபிஎஸ்சி (UPSC) தலைவராக நியமிக்கப்படுபவர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை அந்தப் பதவியில் நீடிக்க முடியும்.