
PM Modi Addresses Soldiers in Tamil : பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா பெரிய ராணுவ நடவடிக்கை எடுத்த பிறகு, முதல் முறையாக ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஆபரேஷன் சிந்துார் மூலம் பாகிஸ்தானுக்கு லட்சுமண ரேகை வரையப்பட்டுள்ளது' என்று கூறினார். இதன் மூலம், 'இந்திய எல்லையைத் தாண்டும் துணிச்சல் யாருக்கேனும் இருந்தால், அவர்கள் முழுமையான அழிவைச் சந்திப்பார்கள்' என்று மறைமுகமாக எச்சரித்தார்.
பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படைத் தளத்தில், இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பான ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 மற்றும் மிக்-29 போர் விமானங்களுக்கு முன்னால் நின்று ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய மோடி, 'நீங்கள் (இந்திய ராணுவ வீரர்கள்) செய்த செயல் அசாதாரணமானது, கற்பனை செய்ய முடியாதது மற்றும் அற்புதமானது. நமது ராணுவம் வெற்று அணுசக்தி அச்சுறுத்தலுக்குப் பொருத்தமான பதிலை அளித்தபோது, எதிரிகளுக்கு பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தின் முக்கியத்துவம் புரிந்தது. இது வெறும் முழக்கம் அல்ல. நமது ராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுக்க சபதம் செய்துள்ளனர். நமது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் எதிரியின் ஆயுதங்களைத் தாக்கியபோதும் இதே முழக்கம் கேட்டது' என்றார்.
இதேவேளை, நமது படைகளைப் பாராட்டிய மோடி, 'உங்கள் வீரதீரச் செயல்கள் வரலாற்றில் என்றென்றும் பதிவு செய்யப்படும். நமது தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாத முகாம்களை மட்டுமல்ல, பாகிஸ்தானின் தைரியத்தையே அழித்துவிட்டோம். இந்தியாவின் மீது தீய பார்வை வைத்தால் அழிவு நிச்சயம் என்பதை பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் உணர்ந்துள்ளனர். இனி அவர்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது' என்று கூறினார். அதேபோல், 'பயங்கரவாதிகளுக்குத் தப்பிக்க வாய்ப்பளிக்க மாட்டோம். வீட்டுக்குள் நுழைந்து தாக்குவோம்' என்ற தெளிவான செய்தியையும் அவர் வழங்கினார்.
இதற்கு முன்பு மோடி விமானப்படை வீரர்களுடன் உரையாடினார். அப்போது, திரிசூல சின்னம் பொறித்த தொப்பியை அணிந்திருந்தார்.