விவசாய ஏற்றுமதி 3ஆவது ஆண்டாக சரிவு: விவசாயிகளின் வருமானம் பாதிப்பு!

By Manikanda Prabu  |  First Published Feb 14, 2024, 2:41 PM IST

விவசாய ஏற்றுமதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிந்ததால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது


விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கு விவசாயிகளின் போராட்டம் நீடித்த நிலையில், தற்போது மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.

விவசாயிகளில் போராட்டத்தை விவசாய சங்கங்களில் கூட்டு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா முன்னெடுத்துள்ளது. இந்த சங்கம் அரசியல் சாராது. விவசாயிகளில் போராட்டத்திற்கு மொத்தம் 200 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ”விவசாயத்தில் கார்ப்பரேட் தலையீட்டை எதிர்கொள்ளும் விவசாயிகளின் நிலை குறித்து பிரதமர் மோடி கவலை கொள்ள வேண்டும்.” என சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய ஏற்றுமதிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து வருவதாக தரவுகள் கூறுகின்றன. இதனால், விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இந்தியா கடந்த ஓராண்டில் பழங்களின் விநியோகத்தை 102 முதல் 111 வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 2020-21 இல் 17 சதவீதமாக இருந்தது. இது 2022-23 இல் 6 சதவீதமாக குறைந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) ஏற்றுமதியும் 24 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக கடுமையாகக் குறைந்துள்ளது.

ஆனால், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தயாரிப்பு ஏற்றுமதிகள் 26.7 பில்லியன் டாலர் என்ற புதிய உயரத்தைத் தொட்டுள்ளதாகவும், 200 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதியை விரிவுபடுத்தியுள்ளதாகவும் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் கூறியுள்ளது. விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்றுமதி விகிதத்தில் தானியங்கள் ஆதிக்கம் செலுத்துக்கின்றன. அதன்படி, தானியங்கள் 50 சதவீதமும், விலங்கு பொருட்கள் 15 சதவீதமும், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் 8 சதவீதமும், பழங்கள் மற்றும் காய்கறிகள் 6 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தயாரிப்பு மதிப்பின்படி, மொத்த ஏற்றுமதி 2022ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பரில் 19.68 பில்லியன் டாலர்களில் இருந்து 2023ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 17.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. மொத்த வேளாண் ஏற்றுமதி மதிப்பு 2023 நிதியாண்டில் 34.99 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 38.63 பில்லியன் டாலர்களாக இருந்தது.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!

இந்த தரவுகளில் இரு நேர்மறையாக விஷயமும் உள்ளது. அதாவது, இந்தியாவின் வாழை விவசாயிகள் புதிய சந்தையை கண்டுபிடித்துள்ளனர். இந்தியா தனது முதல் தொகுதி வாழைப்பழங்களை கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவிற்கு அனுப்பியது. ரஷ்யாவுக்கு பாரம்பரியமாக அதிக வாழைப்பழங்களை வழங்கும் நாடாக ஈக்வடார் இருந்த நிலையில், அந்நாட்டுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த சந்தையை இந்தியா பிடித்துள்ளது.

விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் வாழைப்பழம் ஏற்றுமதி 63 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.அதைத் தொடர்ந்து, ஓடுகளுடன் கூடிய உலர் பருப்புகள் 110 சதவீதமும், முட்டைகள் 160 சதவீதமும், கேசர் 12 சதவீதமும், தாசேரி மாம்பழம் 140 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதேபோல், ஈராக், வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே 110%, 46%, 18% மற்றும் 47% அதிகரித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பா (0.35%), லத்தீன் அமெரிக்கா (0.35%) மற்றும் ஆசியா (4.3%) போன்ற சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. “இந்தியாவின் சந்தைப் பங்கு மிகவும் குறைவாக உள்ள பல முக்கிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதால் கணிசமான வாய்ப்பு உள்ளது.” என விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அபிஷேக் தேவ் கூறியுள்ளார்.

click me!