உஷார்..!! ஏடிஎம்களில் வந்து விழும் போலி ரூ.2000 நோட்டுகள் - மேலும் ஒரு டம்மி நோட்டு

First Published Feb 23, 2017, 4:27 PM IST
Highlights


டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்து  குழந்தைகள் விளையாடும் போலி ரூ.2 ஆயிரம் நோட்டு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவர் புகார் தெரிவித்த நிலையில், இப்போது 2-வது நபரும் தனக்கும் அதே கதி ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

முதல் பாதிப்பு

டெல்லி, சங்கம் விகார் பகுதியில் கடந்த 6-ந்தேதி ரோகித் என்பவர் அங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ. 8 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அப்போது அதில் வந்த 4 ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

இந்திய ரிசர்வ் வங்கி என்று அச்சிடப்பட்ட இடத்தில் ‘சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா’ (children bank of india) என்ற பெயரும், ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் இடும் இடத்தில் பி.கே என்ற அடையாளமும் இருந்தன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார்.

2-வது புகார்

இந்நிலையில், அதேபோல தனக்கும் போலி ரூபாய் நோட்டுகள் வந்ததாக 26 வயதான சிதாந்த் ஷாசிகர் புகார் தெரிவித்துள்ளார். இவர் எச்.சி.எல். நிறுவனத்தில் மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

போலி நோட்டு

இது குறித்து அவர் கூறுகையில், “ நான் கடந்த ஜனவரி 24-ந்தேதி நான்  வேலைக்காக புறப்பட்டேன். அப்போது நான் கணக்கு வைத்துள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் இந்திராபுரம் கியான்காந்த் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுத்தேன். அப்போது, அதில் வந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு போலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதில் ‘இந்திய ரிசர்வ் வங்கி’ என்பதற்கு பதிலாக, ‘பாரதிய மனோரஞ்சன் வங்கி’ என்றும் ‘சுரன் லேபிள்’ என்றும், ‘சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா’ என்றும் அச்சிடப்பட்டு இருந்தது.  இதையடுத்து, உடனடியாக அந்த போலி ரூபாய் நோட்டை ஏ.டி.எம். காவலாளியிடம் காட்டினேன்.

புகார்

இது தொடர்பாக நான் உடனடியாக வங்கிக்கு சென்று மேலாளரிடம் புகார் செய்தேன். ஆனால், அவரோ, நாங்கள் முறைப்படி சோதனை செய்தபின்தான் பணத்தை ஏ.டி.எம்.களில் வைக்கிறோம் என்று கூறி, புகாரை வாங்க மறுத்தார். அதன்பின், நான் என்னுடைய புகாரையும், என்னிடம் இருந்த ரூபாய் நோட்டின் நகலையும் இணைத்து அவரிடம் அளித்தேன்.

தெரியவில்லை

இது தொடர்பாக நான் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் இணைப்பு கிடைப்பதில்லை. வங்கியின் இணையதளமும் சரியாக இயங்கவில்லை. என்னுடைய பண இழப்புக்குயாரிடம் முறையிடுவது எனத் தெரியவில்லை'' எனத் தெரிவித்தார்.

click me!