
பொதுத் தேர்தலின்போது அரசியல் கட்சி வேட்பாளர்களின தேர்தல் செலவுகளை அரசே ஏற்கலாம் என்றும் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும் என்ற மத்திய அரசின் ஆலோசனையை தேர்தல் ஆணையம் முற்டிறலும் நிராகரித்துள்ளது.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும்தான் தற்போது தேர்தல் செலவுகளை செய்து வருகின்றனர். இதனால் தேர்தலுக்காக நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது. மேலும் , அதிக பணத்தை தேர்தலில் செலவு செய்துவிட்டு அதை குறைத்து மதிப்பிட்டு காட்டுவதும் அரசியல் கட்சிகளின் வழக்கமாக உள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே செய்து விட்டால் இந்த குற்றச்சாட்டுகள் எழாது என்றும் . இதன் மூலம் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும் என்றும் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு யோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சட்டம் மற்றும் பணியாளர்கள் மீதான பாராளுமன்ற நிலைக்குழு தேர்தல் கமிஷன் அதிகாரிகள், சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அப்போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தேர்தல் கமிஷனை பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டது.
ஆனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கலாம் என்ற யோசனைக்கு தேர்தல் கமிஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் கமிஷன் ஆதரிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுக்கு பணத்தை அரசே ஒதுக்கீடு செய்துவிட்டால் வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவுகளையும், அவர்களுக்காக மற்றவர்கள் செலவு செய்வதையும் தேர்தல் கமிஷனால் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நிதி, அவர்கள் அதை செலவு செய்யும் விதம் ஆகியவற்றில் ,முற்றிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடைமுறையில் கடுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதையே தேர்தல் கமிஷன் விரும்புகிறது. என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சி மாதங்களாக ஆன்லைன்’ மூலம் வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் கமிஷனிடம் வைக்கப்பட்ட நிலையில் அதையும் தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
‘தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அறிமுகம் செய்ததே ஆக்கப்பூர்வமான தேர்தல் சீர்திருத்த நடைமுறை என்றும் ஆன்லைன் மூலம் வாக்களிக்க அனுமதி கோருவதை பரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.