மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் புதிய ஆட்சி அமைய இருக்கிறது. ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற அடிப்படையில் ஆட்சி அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாயுதி கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கான அதிகார பகிர்வை கோருவதற்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே, மகாராஷ்டிராவில் இந்தக் கூட்டணி தான் ஆட்சியில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் இருந்து வந்தனர்.
மகாயுதி வெற்றி பெற்ற தொகுதிகள்:
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் இந்தக் கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக 149 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டு இருந்தன.
undefined
மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் மர்மம்:
அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருப்பதால் அவர்கள் தான் முதல்வர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். ஆனால், முதல்வராக இருந்து தற்போது ராஜினாமா செய்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் கடந்த மூன்று நாட்களில் கூட்டணிக்குள் யாருக்கு முதல்வர் பதவி என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. பீகார் மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தபோதிலும், முதல்வராக நீடிப்பதை மேற்கோள் காட்டி ஏக்நாத் ஷிண்டே விவாதம் நடத்தி வருகிறார்.
ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா:
இந்த நிலையில், இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் மூவரும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆளுநரும் இதை ஏற்றுக் கொண்டார். அடுத்த அரசு பொறுப்பு ஏற்கும் வரை காபந்து அரசின் முதல்வராக ஏக்நாத் நீடிப்பார்.
தேவேந்திர பட்னவிசுக்கு அஜித் பவார் ஆதரவு:
முதல்வராவதற்கு தேவேந்திர பட்னவிசுக்கு அஜித் பவார் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். புதிய ஆட்சியில் முதல்வராக இரண்டரை ஆண்டுகளுக்கு தேவேந்திர பட்னவிஸ் நீடிப்பது என்றும், இரண்டு துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருப்பார்கள் என்று முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜவுக்கு எத்தனை அமைச்சர்கள்:
பாஜகவுக்கு 24 அமைச்சர்கள், ஏக்நாத் ஷிண்டேவுக்கு 12 அமைச்சர்கள், அஜித் பவாருக்கு 10 அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர்களாக நீடிப்பார்கள் என்பதுதான் தற்போதைய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னவிஸ்?
முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருப்பார். இரண்டரை ஆண்டுகள் கழித்து தேவேந்திர பட்னவிஸ் பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தேவேந்திர பட்னவிஸ் எப்போதும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் சுமூக உறவில் இருப்பதால், பாஜக தலைமையும் அவரை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதும் தேவேந்திர பத்னவிசுக்கு மோகன் பகவத் தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பல்டி அடித்த அஜித் பவார்:
2014ஆம் ஆண்டில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று இருந்த பாஜக ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி அமைத்து இருந்தது. அப்போது தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தார். மீண்டும் 2019ஆம் ஆண்டில் பட்னவிஸ் தலைமையில் அஜித் பவார் ஆதரவில் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், 80 மணி நேரத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தது. அஜித் பவார் மீண்டும் தனது தாய் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், தற்போது பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு கொடுக்காவிட்டாலும், அஜித் பவார் ஆதரவில் பாஜக ஆட்சி அமைக்கும். அஜித் பவார் ஆதரவு கொடுக்காவிட்டாலும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவில் பாஜக ஆட்சியில் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.