
செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்களை செல்போனில் படம் எடுத்து அதிகாரிகளுக்கும் அனுப்பும் பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறிய டிரைவருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
விபத்துக்களைக் குறைக்க நோக்கில் இந்த புதிய திட்டத்தை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வதந்திரா தேவ் சிங் லக்னோ நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
வாகனங்கள் ஓட்டும் போது செல்போனில் பேசக்கூடாது என்று மோட்டார் வாகனச்சட்டத்தில் விதிமுறைகள் உள்ளன. ஆனால், டிரைவர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இப்போது பயணிகளிடம் உதவி கேட்டுள்ளோம். வாகனங்கள் ஓட்டும்போது டிரைவர் யாரேனும் செல்போனில் பேசினால், அந்த டிரைவரை பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பிட வேண்டும். அனுப்பும் போது பயணியின் முகவரி, விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
அந்த புகைப்படம் கிடைக்கப்பட்ட உடன், தவறு செய்த அந்த குறிப்பிட்ட டிரைவர் மீது நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும். அந்த புகைப்படம் அனுப்பிய பயணிக்கு வெகுமதியும், பரிசும் அளிக்கப்படும்.
இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து, ஏராளமான பயணிகள் டிரைவர்களின் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். விரைவில் தண்டனை பெற்ற டிரைவர்கள், பரிசு பெற்ற பயணிகள் விவரம் வௌியிடப்படும்.
இந்த திட்டம் இரு வழிகளில் அரசுக்கு உதவும். ஒன்று செல்போனில் பேசும் டிரைவர்களை அடையாளம் கண்டு அரசுக்கு தெரிவிக்கும் அதிகாரம் மக்களுக்கும்,ப யணிகளுக்கும் கிடைக்கும்.
இரண்டாவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், தண்டிக்கப்படுவோம் என்று அச்சப்பட்டு டிரைவர்கள் பொறுப்புனர்வுடன் நடந்து கொள்வார்கள். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால்,டிரைவருக்கு 6 மாதம் சிறையும், ரூ.1000 வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த திட்டத்தால், விரைவில் மாநிலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று நம்புகிறோம்.
இந்த திட்டம் குறித்து என்னிடம் முதல்வர் ஆதித்யநாத் தான் என்னிடம் தெரிவித்தார். மேலும், பள்ளிப்பாடங்களில் சாலைபாதுகாப்பு விதிகளையும் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.