
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ. 3.54 கோடி ரொக்கம் கையிருப்பு இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், இரு மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களின் கையிருப்புபணம் குறித்து தெரிவிக்கவில்லை.
ரூபாய் நோட்டு தடைக்கு முன், கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்களிடம் இருக்கும் பணம் குறித்த விவரங்களைத் தெரிவித்தது குறித்துகாமென்வெல்த் மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் என்பவர் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணையத்திடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்து, வருமானவரி விலக்கு பெற கட்சிகள் தங்களின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வை வெங்கடேஷ் மேற்கொண்டார்.
அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அதிகபட்சமாக ரூ. 3.54 கோடி பணமும், அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ. 88 ஆயிரத்து 468 இருந்தது தெரியவந்தது.
இது குறித்து வெங்கடேஷ் நாயக் கூறுகையில், “ சில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் 2015-16ம் ஆண்டுக்கான வருவாய் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. இதில் எந்த ஒரு கட்சியும் தானாக முன்வந்து, ரூபாய் நோட்டு தடையின் போது எப்படி சமாளித்தோம் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. அதேசமயம், கையில் எந்த அளவு குறிப்பிட்ட ரொக்கப்பணம் வைத்திருந்தது குறித்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்தவிதமான தணிக்கை அறிக்கையையும் இன்னும் தாக்கல் செய்யவில்லை.
மாநில கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி, அசாம் கன பரிசத், சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் 2015-16ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை அளிக்கவில்லை.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருவாய் கணக்குகளை தாக்கல் செய்யாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருவாய் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யாத கட்சிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
அரசியல் கட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன், நம்பகத்தன்மையுடன் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், தனிநபர் ஒவ்வொருவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 என்பது கேலிக்குரியதாகிவிடும் '' எனத் தெரிவித்தார்.