
நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு, சில்லறை பற்றாக்குறையைப் போக்க, அதிகமான அளவில் ரூ.500, ரூ.100 நோட்டுகளை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம், மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நாகராஜன் ஆகியோர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்து வருகின்றனர். அதற்கு பதிலாக அவர்களுக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால்,பெரும்பாலான மக்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சந்தையில் கொடுத்து சில்லரை மாற்றவும் முடியவில்லை, செலவு செய்வதிலும் சிரமமாக இருக்கிறது என்று கூறி மக்கள் வங்கியில் வாங்க மறுக்கிறார்கள். வங்கியிலும், ஏ.டி.எம்.களிலும் குறைந்த மதிப்புடைய ரூ.100 நோட்டுகளும் கடும் பற்றாக்குறையாக இருக்கிறது. பணப்பற்றாக்குறை காரணமாக, ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் இருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் குறைந்த மதிப்புடைய ரூ.100, ரூ.500, நோட்டுகளை கேட்கும் போது, வங்கிகளால் வழங்க இயலவில்லை. பணத் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதன் காரணமாக, வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளிடம் மக்கள் தங்கள் கோபத்தை காட்டுகின்றனர். ஆத்திரத்தில் கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தும் போது, மக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இது வங்கி ஊழியர்களுக்கு மனரீதியாக பெரும் அழுத்தத்தை தந்து வருகிறது. இதில் கோபமடைந்த மக்கள் சிலர், வங்கியின் கிளையை பூட்டவும் செய்கிறார்கள்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரிசர்வ் வங்கி அடுத்த வரும் நாட்களில் கூடுதலாக ரூ.100, ரூ.500 நோட்டுகளை அதிகமாக வங்கிகளுக்குசப்ளை செய்ய வேண்டும்.
மேலும், ரிசர்வ் வங்கி அதிகமான பணத்தை தனியார் வங்கிகளுக்கே அளிக்கிறது. பொதுத்துறை வங்கிகளை பாராமுகமாக நடத்தி, குறைவான பணத்தை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.