ரூபாய் நோட்டு தடைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டிச.2 ல் விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி

First Published Nov 26, 2016, 9:00 AM IST
Highlights


மத்தியஅரசு ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டது செய்யப்பட்டதா? , பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் ஒட்டு மொத்தமாக டிசம்பர் 2-ந் தேதி விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

அதே சமயம், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால், டிசம்பர் 2-ந்தேதி விசாரிப்பதற்கு பதிலாக இம்மாதம் 29-ந்தேதியே விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

அதை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டு, டிசம்பர் 2-ந்தேதி, மதியம் 2 மணிக்கு விரிவாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

வழக்கு

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்து இருந்தது.

கடந்த 23-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் செய்யப்பட்டு வசதிகள், ஜன் தன் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யமத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோகத்கிக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதேசமயம், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அத்துனை மனு தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

விசாரணை

இந்நிலையில் இந்த மனு நேற்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், டி.ஓய், சந்திராசுத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகல் ரோகத்தி வாதிடுகையில், “ மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தையும் பொதுவாக ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதை உச்ச நீதிமன்றமோ அல்லது  டெல்லி உயர் நீதிமன்றமோ முடிவு செய்ய வேண்டும்.

அனைத்து வழக்குகளும் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திலோ அல்லது, உச்சநீ திமன்றத்திலோ டிசம்பர் 2-ந்தேதி விசாரிக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

கூச்சல்

இந்நிலையில், பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாதிடத் தொடங்கியதால் ஒரே கூச்சல் நிலவியது.

அப்போது அவர்களை இடைமறித்து பேசிய நீதிபதிகள், “ அனைவரும் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் பேசுகிறீர்கள். நீதிமன்றத்துக்கு என ஒரு வரைமுறை இருக்கிறது. இந்த வழக்குகளை 6 வாரத்துக்கு ஒத்தி வைக்கவும் முடியும். உங்களுக்குள் யார் பொதுவாக வாதிட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்றனர்.

கருத்தொற்றுமை

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, அனைவருக்கு பொதுவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுவார் என்று கூறினார்.

22 சதவீதம்தானாம்

பா.ஜனதா செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா வாதிடுகையில், “ நாட்டில் 78 சதவீத மக்கள் 100 ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய நோட்டுகளையே பயன்படுத்துகிறார்கள். 22 சதவீதம் மட்டுமே உயர்மதிப்பு கொண்ட பணத்தை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றார்.

மேலும், இந்த ரூபாய் நோட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் பெரும்பாலானவை 2ஜி, நிலக்கரி ஊழல், காமென்வெல்த் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் தாக்கல் செய்த வழக்காகும்'' என்று தெரிவித்தார்.

இழப்பீடு

 வழக்கறிஞர்கள் எம்.எல். சர்மா மற்றும் எஸ். முத்துகுமார் ஆகியோர் வாதிடுகையில், “அரசின் அறிவிப்புக்கு பின் வங்கிகளில் நின்று உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்'' என்றனர்.

டிசம்பர் 2

அப்போது தலையிட்ட நீதிபதிகள், “ நீதிமன்றத்தை பொதுவான தளத்துக்கு பயன்படுத்தக்கூடாது. உங்கள் கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். ரூபாய் நோட்டுக்கு அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா ? என்றும், பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 2-ந்தேதி நண்பகல் 2மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'' என்று தெரிவித்தனர்.

மேலும், ரூபாய் நோட்டு அறிவிப்பால் எழுந்துள்ள சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து கூடுதலாக ஒரு பிராமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திஅரசின் அட்டர்னி ஜெனரல் முகல் ரோகத்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

click me!