
டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாலை கடுமையாக வீசிய புழுதிப் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
தலைநகர் டெல்லியில் இன்று பகலில் உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது. மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது.
இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன ஸ்ரீநகர்-டெல்லி இடையிலான தனியார் விமானம் அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு நேரிட்டது. வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதேபோல், மேற்கு வங்கத்திலும் கனமழை பெய்தது. அங்கு மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஹிமாலயா மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இப்போது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழுதி புயலுடன் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் வட மாநிலங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.