
‘ஆன்-லைன்’ விற்பனையில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தை 166 முறை ஏமாற்றி ரூ. 52 லட்சம் மோசடி செய்த கில்லாடி இளைஞரையும் அவருக்கு உதவிய மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் சிவம் சோப்ரா(வயது21). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இவர்தான் ‘ஹை டெக்காக’ சிந்தித்து அமேசான் நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார். இதற்காக ரூ. 150 ரூபாய் கொடுத்து, 140 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். வெவ்வேறு பெயர்களில் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் சிம்-கார்டுகளை சிவன் பெற்றுள்ளார்.
அந்த சிம் கார்டுகள் மூலம் அமேசான் நிறுவனத்திடம் செல்போன்களை சிவன் ஆர்டர் செய்து மோசடி செய்துள்ளார்.
அமேசானில் ஆர்டர் செய்த செல்போன் சிவன் கைக்கு கிடைத்த சிறிது நேரத்துக்கு பின் , அட்டை பெட்டி காலியாக வந்துள்ளது எனக் கூறி அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் சிவம் புகார் செய்வார். அந்த நிறுவனமும் இவர் கூறியதை நம்பி, அவரின் வங்கிக்கணக்கு அல்லது, ‘கிப்ட் கார்டு’ மூலம் பணத்தை திருப்பி அளிக்கும்.
ஆர்டரில் போலியான முகவரியை கொடுப்பதால், பொருட்களை டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் செல்போன் என்னுக்கு சிவனை தொடர்பு கொள்வர். அவர் அவர்களிடம் நான் வேறு இடத்தில் இருக்கிறேன் அல்லது ஏதாவது ஒரு கடையைக் குறிப்பிட்டு அங்கு வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று சிவன் கூறிவிடுவார்.
இதேபோன்று ஒவ்வொரு முறையும் ெவ்வேறு சிம்-கார்டு மூலம் அமேசான் நிறுவனத்திடம் செல்போன் சிவன் ஆர்டர் செய்து ஏமாற்றுவார்.
கடந்த ஏப்ரல், ேம மாதங்களில் 166 முறை அமேசான் நிறுவனத்திடம் செல்போன் ஆர்டர் செய்து பெட்டியில் செல்போன் இல்லை எனக் கூறி ஏமாற்றி, சிவன் பணத்தை திரும்பப்பெற்றுள்ளார்.
இதையடுத்து, அமேசான் நிறுவனம் டெல்லி போலீசில் புகார் செய்தது. மேலும், அமேசான் நிறுவனமும் விசாரணை நடத்தியதில் 141 செல்போன் எண்களில் 48 வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் மூலம் பொருட்களை சிவன் வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்தது.
இதையடுத்து, போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணையை நடத்தி வந்தனர். சமீபத்தில் இதேபோன்று அமேசானுக்கு வந்த புகாரை வைத்து, செல்போன் டெலிவரி செய்த நபரின் உதவியுடன் சிவனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து டெல்லி வடமேற்கு போலீஸ் கமிஷனர் மிலிண்ட் தும்ரே கூறுகையில், “ சிவனிடம் நடத்திய விசாரணையில் சச்சின் ஜெயின் என்பவரிடம் 150 சிம்-கார்டுகளை வாங்கியதையும், செல்போன்களை சச்சினிடம் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். சிவனிடம் இருந்து ரூ. 12 லட்சம் பணம், 40 வங்கி கணக்கு பாஸ்புக், காசோலை, 19 செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன’’ எனத் தெரிவித்தார்.