
டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி எம்.ஆர்.ஷா, நீதிபதி கிருஷ்ணா முராரி, நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பைக் கூறியுள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே அதிகாரம் உள்ளது என்றும் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றும் கூறியுள்ளது.
நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைத் தவிர சேவைகள் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், "மாநிலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது என்றாலும் மாநிலங்களின் நிர்வாகத்தை மத்திய அரசு கையகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனவும் கூறியுள்ளது.
"ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கையானது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதிகளாகும். பல்வேறு தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இது உறுதி செய்கிறது" எனவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.