டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தை வளர்க்க அகாடமி..! தலைவராக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமனம்

By karthikeyan VFirst Published Jan 5, 2021, 12:55 PM IST
Highlights

டெல்லியில் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த ஒரு அகாடமி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

டெல்லியில் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு மையத்தை டெல்லி மாநில அரசு அமைத்திருக்கிறது. அதன் தலைவராக டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணை தலைவராக டெல்லி மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலா் என்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக மையம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித்துறையில் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், டெல்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை இந்த அகாடமியின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது. டெல்லி, கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் டெல்லியில் வசிக்கின்றனர்; பணியாற்றி வருகின்றனா். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக வைத்திருக்கிறது. 

டெல்லியில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். எனவே தமிழ்நாட்டின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்துகொள்வதற்காக தமிழ் அகாடமி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் வெளிவந்ததுமே டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் பரவலாக ஆதரவு கிடைத்தது மட்டுமல்லாது, டெல்லி அரசுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியும் தெரிவித்துவருகின்றனர்.

டெல்லியில் தமிழ் சங்கம் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதுதவிர 80 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான டெல்லி தமிழ் கல்வி சங்கத்தின்கீழ் 8 பள்ளிகள், தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கி வருகின்றன. மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் ஊதியத்தில் ஒரு பகுதிக்கான நிதியுதவியை டெல்லி அரசு செய்து வருகிறது.
 

click me!