
எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) பத்தாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம். பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள், 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 35 முதல் 60 இடங்களைப் பெறும் என்று கூறுகின்றன.
JVC எக்ஸிட் போல் கணிப்பு, பாஜக 39-45 இடங்களை வெல்லும் என்று மதிப்பிடுகிறது. அதே நேரத்தில் மேட்ரிஸ், பாஜக 35-40 இடங்களையும் ஆம் ஆத்மி 32-37 இடங்களையும் பெறும் என்றும் கணித்துள்ளது. இதற்கிடையில், பிப்பிள்ஸ் பல்ஸ் எக்ஸிட் போல், பாஜகவுக்கு 51-60 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் எனச் சொல்கிறது. ஆம் ஆத்மிக்கு 20க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று கணித்துள்ளது.
இந்தக் கணிப்புகள் டெல்லியில் பாஜக மீண்டும் எழுச்சி பெற வலுவான வாய்ப்பு உள்ளதைக் குறிக்கிறது. அதே வேளையில், கடந்த காலங்களில் எக்ஸிட் போல் கணிப்புகள் முற்றிலும் தவறாகவும் முடிந்துள்ளன. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது இறுதி முடிவு வெளியாகும்.
இன்று (புதன்கிழமை) டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம் முதலே மந்தமாகவே இருந்தது. இமாலை 5 மணிவரை மிகவும் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவான வாக்குப்பதிவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போட்டியிடுகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற முயற்சிக்கின்றன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது. இருப்பினும், வாக்குகளுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாகவும் கள்ள ஓட்டு போடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
புது டெல்லி, கல்காஜி மற்றும் ஜாங்புரா போன்ற முக்கியமான தொகுதிகள் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே வேளையில், எக்ஸிட் போல் கணிப்புகள் முடிவுகள் குறித்த சாத்தியங்களை வழங்கக்கூடும். இருப்பினும், கடந்த கால போக்குகள், எக்ஸிட் போல் கணிப்புகளை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.