
இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் குறித்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள “பசு, இந்துத்துவா, குஜராத்” போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதை நீக்க இயக்குநரும், பொருளாதார வல்லுநருமான சுமன் கோஷ் மறுப்பதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், இந்த ஆவணப்படம் திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை ரீலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நோபால் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் குறித்து, “ தி ஆர்குமென்டேட்டிவ் இந்தியன்” என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை பொருளாதார வல்லுநர் சுமன் கோஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் வெள்ளிக்கிழமை திரையிடப்பட திட்டமிடப்பட்டு இருந்து.
இந்த திரைப்படத்தை “யுஏ” சான்றிதழ் பெற்று திரையிட வேண்டும் என்பதற்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள் முன் ஆவணப்படம் நேற்றுமுன்தினம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
இந்தபடத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளான “குஜராத், பசு, இந்தியாவின் இந்துத்துவா பார்வை, இந்து இந்தியா” ஆகிய வார்த்தைகள் தற்கால அரசியல் சூழலுக்கு உகந்தது இல்லை என்பதால் அதை நீக்க வேண்டும் என இயக்குநரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு இயக்குநர் கோஷ் மறுத்துவிட்டார். இதனால், சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், திரைக்கு வருமா என்பது ஐயமாகி இருக்கிறது.
இது குறித்து இயக்குநரும், பொருளாதார நிருபனருமான சுமன் கோஷ் நிருபர்களிடம் கூறுகையில், “ குஜராத் வன்முறை குறித்து இந்த ஆவணப்படத்தில் அமர்த்தியா சென் பேசியுள்ளார். அதில் குஜராத் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். மேலும், பசு என்ற வார்த்தையையும், இந்து, இந்துத்துவா ஆகிய வார்த்தைகளையும் நீக்க கோரியது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஆனால், இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
உத்தா பஞ்சாப், லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா ஆகிய இந்தி திரைப்படங்களுக்கு திரைப்படத் தணிக்கை துறை அனுமதி வழங்காமல் எவ்வளவு பெரிய சிக்கலை சந்தித்து என்பதை அறிவேன். இந்த திரைப்படம் குறித்து எனது நியாயமான குரலை நான் கொடுப்பேன். ஆவணப்படம் என்றால், குறிப்பிட்ட வரையரைக்குள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது திரைக்கதை எழுதி தயாரிக்கப்பட்ட படம் இல்லை, சர்வதேச புகழ்பெற்ற, அங்கீகாரம் பெற்ற ஒரு மனிதரைப்பற்றிய படம். திரைப்படத் தணிக்கை துறையின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.
இது குறித்து பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னிடம் கேட்டபோது, அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். தான் இயக்காதபோது, இதில் கருத்துக் கூற முடியாது என்று கூறிவிட்டார்.
வங்காள திரையுலகத்தின் மூத்த நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கூறுகையில், “ இது போன்ற திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை துறை அனுமதிக்காதது முட்டாள்தனமானது. இனவெறியுடன் நடப்பதை காட்டுகிறது. ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டு, நம் கருத்துக்களையும், விருப்பங்களையும் தெரிவிக்க உரிமை இல்லாதது வெட்கமாக இருக்கிறது.
அமர்த்தியா சென் பேசிய வார்த்தைகளை சர்வதேசமும் அங்கீகரித்துள்ளது. இப்போது அதை நீக்க கோருவது இனவெறியை காட்டுகிறது. மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்ட அரசிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்க கூடாது” என்றார்.