இந்தியாவில் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும் ஊரடங்கு..? மே மாதத்தில் பெரும்பாதிப்பு..? மக்களே உஷார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 27, 2020, 10:09 AM IST
Highlights

 மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடித்தால், கோரோனாவை விரட்டியடித்து மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீடிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு வல்லரசு நாடாள அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளை கலங்கடித்து வருகிறது. கொரோனா அதிகம் பரவும் 10 நாடுகளில் ஐரோப்பிய  நாடுகள் 7 இடங்களை பிடித்துள்ளன. இப்படி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 16-ம் தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான செயல்பாடுகளை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இதே வேகத்தில் இருந்தால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனை குறைவு காரணமாக சமூக பரவலை கணிக்க முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மையங்களுக்கு வெளியே எத்தனை பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என மதிப்பிட முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 14 வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்றே கருதப்படுகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்து நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையம் (சி.டி.டி.இ.பி) தோராயமாக ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ’’கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவை மீறினால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியது வரும். மே மாதத்தில் நோய் அதிகரிக்கும் போது 60,000 பேர் வரை தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இருக்கக்கூடும்.

மோசமான நிலையில், எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடக்கூடும்’’ என்று கூறியுள்ளது. ‘’மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்கவில்லை என்றால் கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக’’ கொரோனா கட்டுப்பாட்டு  அறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர், அரிசி, பருப்பு, பண உதவித் தொகைகளையும் அறிவித்துள்ளது. இதனால், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படுமா? என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதை போல மே மாதம் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு நிச்சயம் இருக்கும் என கருதப்படுகிறது. மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடித்தால், கோரோனாவை விரட்டியடித்து மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீடிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். 

click me!