ஒரே நாளில் 195 மரணம்.. 3900 பாதிப்பு..! இந்தியாவில் கோரமுகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 9:47 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 50 ஆயிரத்தைக் நெருங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 1500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 46,433 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,568 பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,900 பேர் பாதிக்கப்பட்டு 195 பேர் பலியாகியுள்ளனர்.

ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 12,847 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் 50 ஆயிரத்தைக் நெருங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா பரவுதல் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 14,541 பேர் பாதிக்கப்பட்டு 583 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 2,465 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 5,804 பேரும், டெல்லியில் 4,898 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,942 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 527 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!