இந்தியாவில் 500ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

By karthikeyan VFirst Published Mar 24, 2020, 9:01 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
 

சீனாவில் உருவான கோரோனா வைரஸ், சீனாவை விட இத்தாலியில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் இத்தாலியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை மிஞ்சிவிட்டது. இந்தியாவில் கொரோனா பொதுச்சமூகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 

ஆனாலும் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்று இரவு நிலவரப்படி 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 492ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 492 பேரில் 451 பேர் இந்தியர்கள் மற்றும் 41 பேர் வெளிநாட்டினர். கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 37 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 89 பேரும் கேரளாவில் 95 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் கேரளாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு கொரோனாவின் தீவிரம் அதிகமாகியுள்ளது. 

மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தினாலும், இன்று மாலை முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் என்பதால், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய தொழில்நகரங்களிலிருந்து, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறி சமூக விலகல் என்ற நோக்கத்தையே கெடுத்துவிட்டனர். மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்.

click me!