
தேமுதிக தேர்தல் அறிக்கை :
கேப்டன் விஜயகாந்தின் மிக முக்கிய வாக்குறுதி ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் திட்டம்’ ஆகும். 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவின் (DMDK) அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சமாகும். 'தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும். அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்கப்படும்.
இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது' என்று தேமுதிக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கடந்த தேர்தல்களில் கனவு திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் நின்றார். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக வந்த அவரால், அதற்கு மேல் அதில் ஜொலிக்க முடியவில்லை என்பது அவரது ஆதரவாளர்களுக்கு இன்றளவும் இருக்கும் வருத்தமாகும்.
ஜெகன் மோகன் :
2019 ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (Jegan Mohan Reddy) முதலமைச்சராக பதவியேற்றார். உடனே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் மிக முக்கியமானது வீடு தேடி வரும் ரேஷன் திட்டமாகும்.
அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க, விரும்பும் பொருட்களை தொலைபேசியில் தெரிவித்தால் வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வெற்றி கண்டார்.
இந்த திட்டத்தை ஏற்கனவே டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி செயல்படுத்தியது. பின்னர் மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அது முடங்கியது. என்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயமாகும். அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் இந்த திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு :
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக பகவந்த் மான் (Bhagwant Mann) பதவியேற்றார். பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பகவந்த் மான் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். 'யாராவது லஞ்சம் கேட்டால் அதை வீடியோ அல்லது ஆடியோவாக எனது தனிப்பட்ட வாட்ஸ் அப் மூலம் மாநில மக்கள் ஊழல் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது ‛பஞ்சாப் மாநிலத்தில் மக்களின் வசதிக்கேற்ப வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அதிகாரிகள் குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருள்களை வழங்குவதற்கான நேரம் கேட்டு விநியோகம் செய்யப்படும்' என அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.