தலைமை நீதிபதியின் பாராட்டைப் பெற்ற சமையல்காரரின் மகள்! காரணம் என்ன தெரியுமா?

Published : Mar 13, 2024, 10:14 PM IST
தலைமை நீதிபதியின் பாராட்டைப் பெற்ற சமையல்காரரின் மகள்! காரணம் என்ன தெரியுமா?

சுருக்கம்

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் சமையல்காரரின் மகளான பிரக்யாவுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவை கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளன.

சட்ட ஆராய்ச்சியாளரும், உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் சமையல்காரரின் மகளுமான பிரக்யா (25), அமெரிக்காவின் இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கான உதவித்தொகையை வென்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவை அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளன.

அவரது சாதனைக்காக பிரக்யாவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரியும் அஜய் குமார் சமல் என்பவரின் மகள் பிரக்யா. நீதிபதிகள் ஓய்வறையில் கூடியிருந்த நீதிபதிகள் தங்களது அன்றாடப் பணிகளை தொடங்குவதற்கு முன்பு பிரக்யாவுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

"பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதைச் சாதித்துள்ளார் என்று நாங்கள் அறிவோம். இருந்தாலும் அவருக்குத் தேவைப்படும் எல்லாம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்... அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

தலைமை நீதிபதி பிரக்யாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான மூன்று புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். ஒவ்வொன்றிலும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கையெழுத்திட்டனர். பிரக்யாவின் பெற்றோருக்கும் நீதிபதிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய பிரக்யா, தனது தந்தை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளால் சூழப்பட்ட இடத்தில் பணிபுரிவது நீதித்துறைத் தேர்ந்தெடுப்பதற்குக் முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறினார்.

"இந்தியாவில் சட்டத்தை ஒரு தொழிலாக மேற்கொள்ள ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால், நிச்சயம் உங்களுக்கு உதவி செய்பவர்கள் இருப்பார்கள்" என்றும் பிரக்யா கூறினார்.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் பாராட்டைப் பெற்ற பிரக்யா, நீதியரசர் சந்திரசூட் மீது தான் வைத்திருக்கும் மரியாதையும் வெளிப்படுத்தினார். தலைமை நீதிபதி சந்திரசூட்டை தனக்கு ஒரு கலங்கரை விளக்கமாகப் பார்ப்பதாக பிரக்யா கூறினார்.

"நீதிமன்ற விசாரணைகளின் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் அவரது பேச்சுத்திறனை அனைவரும் பார்க்கலாம். அவர் இளைஞர்களிடம் சட்டத்துறை மீதான ஈடுபாட்டை வளர்க்கிறார். அவரது வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. அவர்தான் எனக்கு ரோல் மாடல்" என்று பிரக்யா தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!