ஆர்டிஐ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு... வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் பொருந்தும்..!

By vinoth kumarFirst Published Nov 13, 2019, 3:15 PM IST
Highlights

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, 2010-ல் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, 2010-ல் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் (ஆர்டிஐ) கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


88 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என, தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றச் செயலாளர், நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.  மேல்முறையீட்டு மனு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும், சந்திரசூட், ரமணா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து நீதிபதிகளுக்கு ஓரளவு பாதுகாப்பும் வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டப்படி உச்சநீதிமன்றமும் பொது அமைப்புதான். வெளிப்படைத்தன்மையால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படமாட்டாது என்று தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

click me!