
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் ஆலோசனை நடத்தினார்.
நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேரும் செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீதான தங்களின் அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. ஜனநாயகம் இல்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுக்கிறார். முறைப்படி நடக்க வேண்டிய நடவடிக்கைகள் முறைதவறி நடக்கின்றன. இதுதொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வேறு வழியில்லாமல் மக்கள் மன்றத்தை நாடி வந்துள்ளோம் என அடுக்கடுக்காக அதிர்ச்சி அளித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, நீதிபதிகளின் பேட்டி தொடர்பாகவும் அதனால் நீதித்துறையில் எழுந்த சலசலப்பு தொடர்பாகவும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கருத்தையும் தலைமை நீதிபதி கேட்டு தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.