
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு குறித்து கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ``வங்கிகளில் மக்களுக்கு பணம் கொடுக்கும்போது, அடையாள அட்டையைக் கேட்கிறார்கள். மோடி சொன்ன நல்லகாலம் வந்துவிட்டது என்பதற்கு இதுதான் அடையாளமோ?'' எனக் கிண்டல் செய்துள்ளார் .
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை நடைமுறைப்படுத்திய விதம், திட்டம் குறித்து டுவிட்டரில் கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “ வங்கிகளில் செல்லாத ரூபாய் மாற்ற நாடுமுழுவதும் வேலைக்கு செல்லும் மக்கள் லட்சக்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள். இப்படியே நின்று கொண்டு இருந்தால், உற்பத்தி திறன், பொருளாதார உற்பத்தி உயரும்'' எனக் கேலி செய்துள்ளார்.
மற்றொரு டுவிட்டில், சிதம்பரம் கூறுகையில், “ ஏழை மக்கள் நன்றாக தூங்கலாம், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள்தான் தூக்கம் வராமல், மாத்திரை சாப்பிட வேண்டி வரும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆமாம், ஆயிரக்கணக்காண பணக்காரர்களும், ஊழல் செய்தவர்களும்தான் வரிசையில் நிற்கிறார்கள். ஏழை மக்கள், மிகவும் மகிழ்ச்சியாக வீட்டில் இருக்கிறார்கள்.
வங்கிகள் மக்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்கிறது. அதிலும் செல்லாத ரூபாயை மாற்றும்போது, அடையாள அட்டையை கேட்கிறது. இதுதான் மோடி சொன்ன நல்ல காலம் வந்துவிட்டது (அச்சே தின்) என்பதற்கு அடையாளமோ?'' என கூறியுள்ளார்.
முன்னதாக ப.சிதம்பரம் கூறுகையில், “ காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியின் திட்டததை வரவேற்கிறது. அதேசமயம், சாமானிய மக்களை துன்புறுத்துவது நல்லதல்ல'' எனத் தெரிவித்திருந்தார்.