
எலான் மஸ்க்கின் 'X' சமூக வலைதளத்தில் உள்ள 'Grok' AI கருவி மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஜனவரி 7-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AI-யைப் பயன்படுத்தி, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரிக்கவும் (Deepfakes), போலி கணக்குகளை உருவாக்கி சட்டவிரோதமான படங்களைப் பகிரவும் சில பயனர்கள் முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது. இது பெண்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு எதிரானது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கடந்த ஜனவரி 2-ஆம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆரம்பத்தில் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மேலதிக நேரம் கோரியதால் தற்போது ஜனவரி 7 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐடி சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு (Immunity) ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. அப்படி ரத்து செய்யப்பட்டால், பயனர் பதிவிடும் சட்டவிரோத கருத்துகளுக்கு அந்த நிறுவனமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
Grok AI-யின் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்து, இனி இதுபோன்ற ஆபாசமான விஷயங்களை அது உருவாக்காதவாறு உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, X தளத்தின் பாதுகாப்புப் பிரிவு சில விளக்கங்களை அளித்துள்ளது.
அதன்படி, சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும். Grok AI-யைப் பயன்படுத்தி முறையற்ற படங்களை உருவாக்குபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.