மாற்றுக் கட்சிக்கு தாராளமாக ஓட்டு போடுங்கள்... பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி!

By Asianet TamilFirst Published Apr 7, 2019, 2:09 PM IST
Highlights

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு செய்தது வெறும் ட்ரைலர்தான். இனிமேல்தான் மக்கள் முழு படத்தையும் பார்க்கப் போகிறார்கள். 

 நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் மாற்று கட்சிக்கு ஓட்டளியுங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாகப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 11 அன்று  நாக்பூரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத்  தொகுதியில் பாஜக சார்பில் பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால், நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு கட்கரி பேட்டி அளித்திருக்கிறார்.

 
 அதில் “இந்தத் தேர்தல் எங்கள் அரசுக்கு வைக்கப்பட்டுள்ள பரீட்சை. கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் கட்சி செயல்பட்ட விதம் பற்றி ஆய்வு செய்து, மக்கள் முடிவு எடுக்கலாம். ஒரு வேளை நாங்கள் சரியாக பணி செய்யவில்லை என மக்கள் நினைத்தால், மாற்று கட்சிக்கு ஓட்டளித்து, வாய்ப்பு அளிக்கட்டும். அரசியல் என்பது ஆட்சி பொறுப்புக்கானது என நான் நினைக்கவில்லை. அது சமூகத்துக்கானது. எனக்கு எப்போதும் சாதி அரசியல் பிடிக்காது.

 
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு செய்தது வெறும் ட்ரைலர்தான். இனிமேல்தான் மக்கள் முழு படத்தையும் பார்க்கப் போகிறார்கள். எதிர்க்கட்சிகளுடன் எங்களுக்கு கொள்கை வேறுபாடு உண்டு. ஆனால், அவர்களை வேண்டாதவர்களாக நினைக்கவில்லை” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

click me!