
சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்களை அச்சுறுத்தவரும் ரான்சம்வேர் ‘வன்னாகிரை’ வைரசால் இந்தியாவில் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம், கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே சில இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன என அரசு தெரிவித்தள்ளது.
ரான்சம்வைரஸ்
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உருவாக்கிய இணைதள பாதுகாப்பு கருவிகளைக் கொண்டு, சர்வதேச அளவில் ‘வன்னாகிரை’ எனும் ரான்சம்வேர் வைரஸ் உருவாக்கப்பட்டு சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வௌ்ளிக்கிழமை முதல் ரஷியா, இங்கிலாந்து, ஸ்பெயின், உள்ளிட்ட 150 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடந்தது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் தாக்கப்பட்டன. கம்ப்யூட்டர்களின் பைல்களை சிறைபிடித்து வைத்து 300 டாலர் டிஜிட்டல் பிட்காயின்களை செலுத்தினால் விடுவிப்பேன் என்று மிரட்டி வருகிறது
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் போலீசாரின் கம்ப்யூட்டர்களிலும், கேரள மாநிலத்தில் பஞ்சாயத்து அலுவலக கம்ப்யூட்டர்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் நடந்ததுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “ தேசிய தகவல் மையம் மிகவும் பாதுாப்புடன், எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மற்ற நாடுகளைப் போல் இந்தியாவில் பெரிய அளவில் ரான்சம்வேர் வன்னகிரை வைரஸால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி, கேரளா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இந்த தாக்குதல் நடந்துள்ளது எனத்தெரிய வந்துள்ளது. இந்தியாவின் வங்கித்துறை, தொலைத்தொடர்பு, மின்சாரம், விமானத்துறை ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களை மிகவும் தீவிரமாக கண்காணித்து, பாதுகாப்புக்கு உள்ளாக்கி வருகிறோம். வன்னாகிரை வைரஸ் தாக்கவிடாமல் போதுமான பாதுகாப்பு சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.
இந்திய கம்ப்யூட்டர் அவசர உதவி குழு(சி.இ.ஆர்.டி. இன்) இயக்குநர் சஞ்சய் பால் கூறுகையில், “ அனைத்தும் மிகவும் எளிமையாக, லகுவாக சென்று வருகிறது. பெரிய அளவிலான வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாக இதுவரை எங்களுக்கு தகவல் ஏதும் இல்லை. நாங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களும் எந்தவிதமான அறிக்கையும் அளிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.