வெளியானது சிறார் & பூஸ்டர் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்… ஜன.3 முதல் அமல்… அறிவித்தது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Dec 27, 2021, 8:31 PM IST
Highlights

சிறார் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

சிறார் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், நிபந்தனைகளுடன் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்தது. கொரோனா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மற்றொரு நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன்பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டு பெற்றார். அதைத்தொடர்ந்து 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 3வது தவணையாக கருதப்படும் பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 ஆம் தேதி முதல் போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஏற்கனவே எந்த வகை தடுப்பூசியை போட்டிருக்கிறார்களோ அதே கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் 2 தவணைகளாக போட்டவர்களுக்கு அதே வகை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்க்கும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் 2வது தவணை தடுப்பூசி போட்டு 9 முதல் 12 மாதங்கள் கடந்த பின், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

click me!