ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ ரெய்டு

By Pothy RajFirst Published Jun 17, 2022, 12:01 PM IST
Highlights

CBI Raids Chief Minister Ashok Gehlot's Brother :ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் இல்லத்தில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் இல்லத்தில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

உரம் ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அக்ராசென் கெலாட் இல்லத்திலும், அவரின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். இந்த சூழலில் அங்கு சிபிஐ ரெய்டு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

உரம் வாங்கி ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாக ஏற்கெனவே அக்ராசென் கெலாட் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரை அமலாக்கப்பிரிவு, சிபிஐ கண்காணித்து வந்தது. கடந்த 2007 முதல் 2009ம் ஆண்டுவரை அக்ராசென் அதிகமான அளவில் உரங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உரம் ஏற்றுமதி ஊழல் வழக்கில், ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு விசாரணையை, சராபஸ் இம்பெக்ஸ் உள்ளிட் நிறுவனத்துக்கு எதிராக தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அனுபம் கிரிஷி என்ற நிறுவனம் அக்ராசென் கெலாட் மூலம் நடத்தப்படுவதாகும். இந்த நிறுவனம் பொட்டாஷ் உரத்தை சராபஸ் இம்பெக்ஸ் நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்துள்ளது.

அக்ராசென் கெலாட்டின் இல்லத்தில் சிபிஐ நடத்தும் ரெய்டை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ அக்ராசென் கெலாட் வீட்டில் சிபிஐ ரெய்டு அரசியல் பழிவாங்கல். டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கப்பிரிவு நடத்தும் விசாரணையைக் கண்டித்து கடந்த 3 நாட்களாக அசோக் கெலாட் தீவிரமாகப் போராடி வந்தார். இது மோடி அரசின் வெட்கக்கேடான பதிலடி.நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம் ” என விமர்சித்துள்ளார்.

click me!