ஆறு மாநில இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு - எதிர்க்கட்சிகள் சோபிக்குமா?

By Manikanda Prabu  |  First Published Sep 5, 2023, 10:21 AM IST

ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


திரிபுரா மாநிலம் தன்பூர் மற்றும் போக்ஸாநகர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்க மாநிலம் துப்குரி, உத்தரப்பிரதேச மாநிலம் கோசி, உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் என மொத்தம் ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. காலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் குவிந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Latest Videos

undefined

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவான பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல்கள் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கோசி தொகுதியிலும், ஜார்கண்டின் டும்ரி, தன்பூர், திரிபுராவின் போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தின் துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளியிலும் ஒருவருக்கொருவர் எதிரணியில் போட்டியிடுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவும், ஓபிசி தலைவருமான தாரா சிங் சவுகான் ராஜினாமா செய்ததை அடுத்து, கோசி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவில் இணைந்துள்ள அவர், அக்கட்சியின் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி சுதாகர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தாரா சிங் சவுகான் ஏற்கனவே பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத்தின் முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர். 2022இல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்த அவர், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

மேற்குவங்கத்டின் துப்குரி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2016ஆம் ஆண்டில் திரிணாமூல் காங்கிரஸ் அத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், 2021இல் அந்த தொகுதியை பாஜக கைப்பற்றியது.

நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்! உதயநிதிக்கு அட்வைஸ் கொடுக்கும் மம்தா பானர்ஜி!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் கடந்த மாதம் 18ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது புதுப்பள்ளி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த உம்மன் சாண்டி.

உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் உம்மான் சாண்டியின் மகனான சாண்டி உம்மன் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கேஜ் தாமஸ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

click me!