
நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 76 சதவீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. அடுத்து வரும் நாட்களில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வங்கிக்கணக்கில் பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வோர் தீவிரமகா கண்காணிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.
ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மத்தியஅரசு தடை செய்து நேற்றுடன் ஒருமாதம் முடிந்தது. இது குறித்து மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கடந்த மாதம் 8-ந்தேதி தடை செய்தது. அப்போது, நாட்டில் ரூ.15.44 லட்சம் கோடி பழைய ரூபாய்கள் புழக்கத்தில் இருந்தன. இப்போது வரை வங்கிகளுக்கு அந்த ரூபாயில் ரூ.11.85 லட்சம் கோடி டெபாசிட்களாகவும், ரூபாய்களை மாற்றியதிலும் திரும்ப வந்துள்ளது.
வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து விட்டு சென்றுவிட்டால், கருப்புபணத்தை வெள்ளையாக மாற்றிவிட்டது என்று அர்த்தமில்லை. அந்த பணம் கணக்கில் வராத பணமாக இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறையின் விசாரணையை எதிர்கொண்டு, அதற்கு பதில் அளிக்க வேண்டியது இருக்கும். அந்த பணத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
அடுத்த வரும் 20 நாட்களும் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வோர்களை தீவிரமாக கண்காணிப்போம். அது வருமான கணக்குகளுக்கு உட்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறாதா என்பதை பரிசீலிப்போம். வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் வெள்ளையாக மாறும் என்பதில் அர்த்தமில்லை.
மக்களுக்கு நேரடி மானியத்தின் பலன் கிடைப்பதற்காக ஜன்தன் வங்கிக்கணக்கு அரசால் தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 வாரங்களில், அந்த கணக்குகளில் ரூ.36 ஆயிரத்து 809 கோடி டெபாசிட்செய்யப்பட்டுள்ளது.
மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறவைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை பெரிய நிறுவனங்களில் இருந்து குறைவான அளவில், குறைந்த மதிப்பில் இருந்து அது டிஜிட்டல் மயமானால், அது ஜனநாயகத்துக்கு சிறந்த நாளாகும் என்று தெரிவித்தார்.