2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்தால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக நூறு இடங்களில்கூட வெல்ல முடியாமல் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
71 வயதாகும் பீகார் முத ல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் நடைபெற்ற மா க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல் குறிப்புணர்த்தும் வகையில் பேசிய அவர், "நீங்கள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும். என் ஆலோசனையை ஏற்று ஒன்றாகப் போராடினால், அவர்கள் (பாஜக) 100 இடங்களுக்கு கீழே சென்று விடுவார்கள். ஆனால் நான் சொல்வதை ஏற்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இருக்கும் ஒரே லட்சியம் அனைவரையும் ஒருங்கிணைத்து, வெறுப்புணர்வைப் பரப்பும் நபர்களிடம் இருந்து நாட்டை விடுவிப்பதுதான். நிச்சயமாக எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நாங்கள் உங்களுடன் நிற்போம்" என்றும் தெரிவித்தார். தான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் அதற்கான முயற்சியில் தான் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலை வர் சல்மான் குர்ஷித், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிதிஷ் குமார் கூட்டணியை மாற்றிக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தது முதல், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முயற்சி எடுத்துவருகிறார்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கைகோர்க்க ஒ ப்புக்கொண்டால், 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும் என்று கடந்த ஆண்டு கூறியிருந்த நிதிஷ் குமார், அதை நிஜமாக்க தொடர்ந்து முயல்வேன் எனவும் உறுதிபடக் கூறினார்.