மேற்கு வங்காளத்தில் முன்னேறும் பாஜக... மம்தாவுக்கு சற்று பின்னடைவு... கருத்துக்கணிப்பில் பகீர் தகவல்..!

By Asianet TamilFirst Published Mar 31, 2019, 6:42 AM IST
Highlights

மேற்கு வங்காளத்தில் முன்பைவிட கூடுதலான தொகுதிகளில் பாஜக வெல்லும் ஏபிபி நீல்சன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் 34 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களை வெல்லும் குறிக்கோளுடன் பாஜக காய் நகர்த்திவருகிறது. 
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடங்களைப் பிடிக்க வாய்ப்பு என்பது குறித்து ஏபிபி நியூஸ், நீல்சன் இணைந்து மேற்கு வங்காள மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ்  பாஜகவுக்கு இடையே போட்டி இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 35 ஆண்டுகளாக ஆட்சி செய்த இடதுசாரிகள் போட்டியில் இல்லை என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதற்கு மாறாக பாஜக மேற்கு வங்காளத்தில் முன்னேற்றம் கண்டிருப்பது கருத்துக்கணிப்பில் எதிரொலிக்கின்றன.
இதன்படி தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மொத்தம் உள்ள 42 இடங்களில் 31 இடங்களைக் கைப்பற்றும் எனக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 34 இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் வென்றது. கடந்த தேர்தலைவிட இந்த முறை 3 தொகுதிகள் குறையும் என்றும் மம்தா சற்று லேசான அதிர்ச்சியைச் சந்திப்பார் என்றும் கருத்துகணிப்பு கூறுகிறது. 
பாஜவைப் பொறுத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் 2 இடங்களைப் பெற்று 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், வரும் தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெல்லும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதன் வாக்கு சதவீதம் 26 ஆக உயரும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
கடந்த முறை சிபிஎம் 2 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இந்த முறை சிபிஎம் கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்காது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

click me!