ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் படத்தை வரைந்து காவல்துறைக்கு பிரபல ஓவியர் ஹர்ஷா உதவி புரிந்துள்ளார்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகபணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கு, இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கும் என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் பொருட்டு, சந்தேக நபரின் படத்தை வரைந்து பிரபல ஓவியர் ஹர்ஷா உதவி புரிந்து வருகிறார். கலை உலகில் தனது அசாதாரண திறமைக்காக அறியப்படும் ஓவியர் ஹர்ஷா, அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, அது போலீசாருக்கு உதவும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த ஓவியத்தை போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
Hope it will Be Useful,
Suspect Imagination Sketches. pic.twitter.com/cO5VdolqKn
சமீபத்திய விசாரணையின்படி, தாக்குதல் நடத்தியவர் அம்மோனியம் நைட்ரேட் பவுடரைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. வன்முறைச் செயல்களில் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அம்மோனியம் நைட்ரேட் என்பது பொது விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட ஒரு பொருளாகும். அம்மோனியம் நைட்ரேட் பொதுவாக பாறைகளை வெடிக்க வைக்க குவாரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அலை மோதும் கூட்டம்: திருப்பதி ஏழுமலையானிடம் அட்வைஸ் கேட்கும் அயோத்தி குழந்தை ராமர்
இதற்கிடையில், பெங்களூரு நகர போலீசார் சந்தேகத்திற்குரிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக, இந்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, குண்டுவெடிப்புக்கு காரணமான நபரை கைது செய்ய உதவக்கூடிய தடயங்களை தேடி, கேரளா, சென்னை, தும்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.