ரூ.16 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட பாலாப்பூர் லட்டு!

By vinoth kumarFirst Published Sep 24, 2018, 9:24 AM IST
Highlights

தெலங்கானா மாநிலம் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்பட்ட பாலப்பூர் லட்டு இந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.16.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்பட்ட பாலப்பூர் லட்டு இந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.16.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த லட்டுவை பாலாப்பூர் ஆர்ய வைசிய சங்கத்தைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தா என்பவர் ஏலம் எடுத்தார். 

21 கிலோ எடை கொண்ட இந்த லட்டு, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்கப்படும். விநாயகர் சிலை கரைக்கப்படும் தினத்தன்று இந்த லட்டு ஏலம்விடப்படும். இந்த லட்டுவை ஏலம் எடுப்பவர்களுக்கு சுபிட்சமும், செல்வமும், உடல்நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த  லட்டுவை ஏலம் எடுக்க பலர் போட்டிபோடுவார்கள். 

இந்த முறை நடந்த ஏலத்தில் சீனாவாஸ் குப்தா தவிர்த்து பி.ராம் ரெட்டி ரூ.16.5 லட்சத்துக்கு லட்டுவை ஏலம் கேட்டார். கடந்த 1994-ம் ஆண்டில் முதன்முதலாக இந்த லட்டு ஏலம் விடப்பட்டது. கோலம் மோகன் ரெட்டி முதல்முறையாக 450 ரூபாய்க்கு லட்டுவை ஏலம் எடுத்தார். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் எடுக்கும் தொகை அதிகரித்து கடந்த 2002-ம் ஆண்டு கே.மாதவ ரெட்டி ரூ.1.05 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். 

அதன்பின் 2002 முதல் 2010 வரை மீண்டும் லட்டு ஏலத்தொகை அதிகரித்ததது. 2012-ம் ஆண்டு கோவிந்த ரெட்டி ரூ.2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். கடந்த 2016-ம் ஆண்டு ரூ.7.5 லட்சத்துக்கு லட்டு ஏலம் போனது. கடந்த 2017-ம் ஆண்டு லட்டு ரூ.15.6 லட்சத்துக்கு திருப்பதி ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.இந்த முறை லட்டுவை ஏலத்தில் எடுத்த குப்தா கூறுகையில்,  இந்த லட்டுவை இந்த முறை நான் ஏலத்தில் எடுத்திருப்பதால், வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். வாழ்க்கை சிறப்பாகச் செல்லும்” எனத் தெரிவித்தார்.

click me!