
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் விசாகபட்டினம் மாவடத்தை சேர்ந்த நரசிபுற அரசு மருத்துவனை அமைந்துள்ள பகுதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்திருந்த பெண்கள் அதிகளவு சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மின்வெட்டு காரணமாக மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர்.
அரசு மருத்துவமனை:
ஆந்திர பிரதேச மாநிலத்தின் நரசிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் என்.டி.ஆர். அரசு மருத்துவமனையின் லேபர் வார்டில் பிரசவ வலியில் பெண் ஒருவர் துடிதுடித்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு பிரசவம் பார்க்க அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரை சுற்றி பிரசவத்திற்கான சிகிச்சை ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது.
மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால், மின்வெட்டு ஏற்பட்டதும் மருத்துவமனை முழுக்க இருளில் மூழ்கியது. உடனடியாக சுதாரித்து கொண்ட மருத்துவ குழு, பிரவசத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்களிடம் முடிந்த வரை மெழுகுவர்த்தி மற்றும் செல்போன்களை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
சுகப் பிரசவம்:
பின் ஓரளவு செல்போன்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் கிடைத்தன. சுமாரான வெளிச்சத்திலேயே மருத்துவர்கள் பிரசவம் பார்த்து வந்தனர். பிரவச வலியுடன் துடித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு சுகப் பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.
"அந்த நேரத்தில் என்னால் எப்படி அனைத்து ஏற்பாடுகளையும் அந்த மருத்துவமனையில் செய்ய முடியும்? என் மனைவி மட்டும் இல்லை, அங்கு மேலும் சில பெண்களும் பிரசவத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தனர். மின்வெட்டு ஏற்பட்டதும், பயம் அதிகமாகி விட்டது. என் மனைவிக்கும், குழந்தைக்கும் என்ன ஆகிடுமோ என பயம் அதிகரித்து விட்டது," என பிரசவித்த பெண்ணின் கணவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்டவசமாக மின்வெட்டு, டார்ச் லைட் வெளிச்சத்திலும் பெண்ணிற்கு எந்த விதமான பிரச்சினையும் இன்றி சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அடுத்து பிறந்த சிசுவின் பாட்டி, குழந்தையை செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே சுத்தம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. "இருளில் எப்படி மருத்துவர்களால் பிரசவம் பார்க்க முடியும். ஒருவேளை ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், என்ன ஆகும்?" என சிசுவின் பாட்டி கேள்வி எழுப்பினார்.
"பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்குள்ள லேபர் வார்டு நரகம் போன்றதாகும். முற்றிலும் இருள் சூழ்ந்துள்ள பகுதியில் கொசுக்கள் அதிகளவில் தொல்லையை கொடுக்கின்றன. மேலும் இந்த பகுதியில் வெப்பமும் அதிகம் ஆகும். பகுதி மருத்துவமனையின் நிலை இங்கு இப்படித் தான் இருக்கிறது," என அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர்.