
மக்களவை உறுப்பினர்கள் வருகைப் பதிவேடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 5 எம்.பி.க்கள் மட்டுமே அனைத்து மக்களவை அலுவல் நாட்களிலும் வருகை தந்துள்ளனர். வருகைப் பதிவேட்டில், மகன் ராகுல் கந்தியை சோனியா காந்தி பின்னுக்கு தள்ளினார்.
மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள் மக்களவைக்கு வந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி மொத்தம் 5 உறுப்பினர்கள் மட்டுமே அனைத்து அலுவல் நாட்களும் (100 சதவீதம் வருகை) மக்களவைக்கு வந்துள்ளனர்.
யார் அவர்கள்?
உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா தொகுதி உறுப்பினர் பைரோன் பிரசாத் மிஸ்ரா, ஜகத்சிங்பூர் தொகுதி உறுப்பினர் குல்மானி சமால், வடக்கு மும்பை தொகுதி பாஜக உறுப்பினர் கோபால் ஷெட்டி, அகமதாபாத் மேற்கு தொகுதி உறுப்பினர் கிரித் சோலங்கி, அரியானா மாநிலம் சோனிபத் தொகுதி பாஜக உறுப்பினர் ரமேஷ் சந்தர் கவுசிக் ஆகிய 5 பேரும், மக்களவை வருகைப் பதிவேட்டில் சதம் அடித்த எம்.பிக்கள் ஆவர்.
சோனியா, ராகுல்
விவாதங்களை பொருத்தவரையில் அதிகபட்சமாக பந்தா தொகுதி எம்.பி. பைரோன் பிரசாத் மிஸ்ரா 1,468 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 22 உறுப்பினர்கள் பாதிக்கும் குறைவான நாட்கள் மட்டுமே மக்களவைக்கு வந்துள்ளனர்.
பிரபலங்களை பொருத்தவரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 59 சதவீத நாட்கள் மக்களவைக்கு வந்துள்ளார். அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி 54 சதவீத நாட்கள் மட்டுமே மக்களவைக்கு வந்துள்ளார்.
முக்கிய தலைவர்கள்
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் வருகைப்பதிவு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் சோனியா காந்தி 5 விவாதங்களிலும், ராகுல் காந்தி 11 விவாதங்களிலும் கலந்து கொண்டுள்ளார். 133 எம்.பிக்கள் அதாவது 25 சதவீதம் பேர் 90 சதவீத நாட்கள் மக்களவைக்கு வந்துள்ளனர்.
சராசரி வருகை
கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து உறுப்பினர்களின் சராசரி வருகைப்பதிவு 80 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி 91 சதவீதமும், மல்லிகார்ஜூன கார்கே 92 சதவீத நாட்களும் மக்களவைக்கு வந்துள்ளனர். இளம் தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா 80 சதவீதமும், ராஜீவ் சதாவ் 81 சதவீத நாட்களும் மக்களவைக்கு வந்துள்ளனர்.
முதல்-அமைச்சர்கள்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சர் முலாயம் சிங் யாதவ் 79 சதவீதமும், அவரது மருமகள் டிம்பிள் யாதவ் 35 சதவீத நாட்களும் அவைக்கு வந்துள்ளார்கள். முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் 45 சதவீதம், சிபுசோரன் 31 சதவீத நாட்கள் வந்துள்ளனர்.
பஞ்சாப் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங் 6 சதவீதமும், காஷ்மீர் முதல் அமைச்சர் மெகபூபா முப்தி 35 சதவீதமும், உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 சதவீதமும் மக்களவைக்கு வந்துள்ளனர்.