
7-வது ஊதியக்குழுவில் சலுகைகளில் உயர்வு, அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த செய்தியை இந்த வாரத்தில் மத்தியஅரசு ஊழியர்கள் எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
அறிக்கை
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழு தனது அறிக்கையை, மத்திய அரசிடம் அளித்துவிட்ட நிலையில், இந்த வாரத்தில் கூட உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
எதிர்பார்ப்பு
இந்த பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தது போலவே, சலுகைகள் உயர்வு, அகவிலைப்படி உயர்வு குறித்த உயர்வு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என நிர்ணயித்தது. அதாவது 25 சதவீதம் முதல் 27 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.
கோரிக்கை
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசனைக்குழு
இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வேஉறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
சமர்பிப்பு
இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
அதில் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் அதிகரிப்பு ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அல்லது நாளை கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன்பின் அறிவிக்கப்படலாம்.
பேட்டி
இது குறித்து தொழிலாளர்நல அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர கூறுகையில், “ அதிகாரம்மிக்க செயலாளர்கள் குழு அளித்த பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் சலுகைகள் அதிகரிப்பு, அகவிலைப்படி உயர்வு, டி.ஏ. போக்குவரத்து படியில் உயர்வுகள், ஊதிய உயர்வும் இருக்கும். எப்படியும் இந்த வாரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் இனிப்பான செய்தியை எதிர்பார்க்கலாம்’’ எனத் தெரிவித்தார்.