
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், தன்னைக் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய 17 வயது பெண்ணை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாகக் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஒரு பள்ளிப் புத்தகம் மூலம் இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு, ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர் ஹர்ஷவர்தன் தீபக் என்பவர், 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நட்பு விரைவிலேயே காதலாக மாறியது.
ராணுவ வீரர் தீபக்குக்கு வேறு ஒரு பெண்ணுடன் நவம்பர் 30-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த காதலி, தீபக்கை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். தனது பேச்சைக் கேட்காவிட்டால், திருமண நாளன்று வந்து சண்டையிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 10 அன்று, அந்தப் பெண் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு, தீபக்கைச் சென்று சந்தித்துள்ளார். இருவரும் பிரயாக்ராஜில் உள்ள சந்திரசேகர் ஆசாத் பூங்கா மற்றும் பாரத்வாஜ் பூங்காவில் சுமார் ஏழு மணி நேரம் ஒன்றாக இருந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதுடன், பெற்றோரிடம் தன்னை அறிமுகம் செய்து வைக்காவிட்டால், நிச்சயிக்கப்பட்டிருக்கும் திருமணத்தை நிறுத்திவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல்தான் தீபக்கிற்கு ஆத்திரமூட்டி, கொலை செய்யத் தூண்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தீபக் தனது காதலியை பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறி, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். நகரில் இருந்து வெகு தொலைவில் உள்ள தர்வை (Tharwai) என்ற பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தோட்டத்தில் வைத்து தீபக் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்த ஒரு மரத்தடியில் குழி தோண்டி, உடலைப் புதைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
நவம்பர் 15 அன்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் மண்ணைத் தோண்டியதற்கான அடையாளம் இருப்பதைப் பார்த்த உள்ளூர்வாசிகள், புதைக்கப்பட்டிருந்த உடலைக் கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
கொலை நடந்த இடத்தில் கிடந்த ஒரு பள்ளிப் பையில், மாணவியின் பெயர் மற்றும் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்த ஒரு பள்ளிப் புத்தகம் போலீஸாருக்கு கிடைத்தது. இதன் மூலம் மாணவியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
மேலும், கேண்டோன்மென்ட் மற்றும் அருகில் உள்ள சாலைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, காணாமல் போன அன்று மாணவி, ராணுவ வீரர் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீபக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார். தீபக்கிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரும் மாணவி தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் அவரைத் திட்டமிட்டு கொன்றிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இது முதலில் கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, ராணுவ வீரர் தீபக் மீது கொலைக் குற்றச்சாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது அவ்வர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.