
நாடுமுழுவதும் வரும் 16-ந்தேதி முதல் நாள்தோறும் மாறும் பெட்ரோல், டீசல் விலையை அறிய ஆப்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். எண்ணை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றியமைப்பது போல், கச்சா எண்ணெய் விலையையும் அதாவது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றவும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதன்படி, வரும் 16-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இதற்கு பெட்ரோல், டீசல் டீலர்கள், பங்க்கு உரிமையாளர்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், நாள்தோறும் விலையை அறிந்து கொள்வதற்கான பணிகளில் கவனம் செலுத்த எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன.
அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் அறிந்து கொள்ள Fuel@IOC என்ற ஆப்ஸை(செயலி) அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள், 92249-92249 என்ற எண்ணுக்கு “RSPDEALER CODE” என்று டைப் செய்து அனுப்பவேண்டும். அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் டீலர்கள் குறியீட்டு எண் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல் நிலைய முகவர்களும், டீலர்களும் நாள்தோறும் மாறும் விலையை எளிதாக மக்களுக்கு சொல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.