கொரோனா ஊரடங்கு: மக்கள் பணிதான் முக்கியம்.. பெற்ற தாயின் இறுதி சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்ஐ

Published : Apr 04, 2020, 09:23 PM ISTUpdated : Apr 04, 2020, 09:24 PM IST
கொரோனா ஊரடங்கு: மக்கள் பணிதான் முக்கியம்.. பெற்ற தாயின் இறுதி சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்ஐ

சுருக்கம்

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இரவு பகல் பாராமல் மக்கள் பணியாற்றிவரும் ஆந்திராவை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், தனது தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட செல்லாமல், போனில் வீடியோவில் பார்த்து தனது தாய்க்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு மக்களுக்கு பிரமிப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   

கொரோனாவால் நாடே வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறது. மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கும் கொரோனாவிற்கு தடுத்துவிரட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகிவருகிறது. வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. 

ஒட்டுமொத்த நாடே வீட்டில் முடங்கியிருக்கும் இந்த வேளையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இரவு பகல் பாராமல் மக்கள் பணியாற்றிவருகின்றனர்.

அந்தவகையில், இப்படி தங்களது சொந்த ஆசாபாசங்களையெல்லாம் விட்டு மக்களுக்காக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த சாந்தாராம். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார் சாந்தாராம். 

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சாந்தாராம், தனது கடமையை ஆற்றிவரும் நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் அவரது தாயார் உயிரிழந்துவிட்டார். இதையறிந்த உயரதிகாரிகள், அவரது தாய்க்கு இறுதிச்சடங்கை செய்ய அவரை அனுமதிக்கும் விதமாக விடுப்பு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த விடுப்பை ஏற்க மறுத்த சாந்தாராம், நாடே இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த நிலையில், நான் மக்கள் பணியாற்றுவதுதான் சரி. அப்போதுதான் எனது தாயின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறி, தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட செல்லாமல், தொடர்ந்து பணியாற்றினார். 

இதுகுறித்து பேசியுள்ள எஸ்.ஐ சாந்தாராம், நான் எனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், 4 மாவட்டங்கள், 45 சோதனைச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். அப்படி நான் சென்றுவருவதற்கு 3 நாட்கள் ஆகிவிடும். வந்த பின்னர், 14 நாட்கள் தனிமைப்பட வேண்டிவரும். அதனால் என்னால் மக்கள் பணியாற்ற முடியாமல் போய்விடும். அதனால் எனது சகோதரரை அனைத்து சடங்குகளையும் கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டேன். தாயின் இறுதிச்சடங்கை போனில் வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்தினேன். நாம் இன்னும் 2 வாரங்கள் ஊரடங்கை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்து மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

PREV
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!